தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக பயணி ஒருவர் வெளியிட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் இலவசமாக பயன்படுத்தி வந்த கழிப்பறைக்கு தற்போது திடீரென ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்ட பயணியிடம், "மூன்று மாதங்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதித்தோம். அது போதாதா?" என பணியாளர் ஏளனமாக பதிலளித்ததாக காணொளியில் பதிவாகியுள்ளது.
மேலும், "கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணை உள்ளதா?" என கேட்டபோது, "இன்னும் எங்கள் கைக்கு ஆணை வரவில்லை. வந்தால் காட்டுகிறோம்" என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, "இலவசமாக பயன்படுத்த வேண்டுமென்றால் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள கழிப்பறையையோ அல்லது மேல்தளத்தில் உள்ள கழிப்பறையையோ பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என பணியாளர்கள் தெரிவித்ததாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், பின்புறம் மற்றும் மேல்தளத்தில் உள்ள அந்த கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதுடன், துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளதாகவும், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், கட்டணம் செலுத்த இயலாதவர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், கழிப்பறை பராமரிப்பு நிர்வாகம் தரப்பில், தண்ணீர், மின்சாரம், தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.3 லட்சத்திற்கும் மேல் செலவாகும் நிலையில் பராமரிப்பு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தருமபுரி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் குடிநீர் வசதி, போதிய இருக்கைகள், பராமரிப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், தற்போது கழிப்பறை கட்டண வசூல் விவகாரமும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"அடிப்படை வசதிக்கே கட்டணம் வசூலிப்பது சரியா?", "இலவச கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்காமல் கட்டண கழிப்பறையை மட்டும் பயன்படுத்த மறைமுகமாக நிர்பந்திப்பது ஏன்?" என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)