தருமபுரி, ஜூன் 13:
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, தருமபுரியில் மை தருமபுரி அமைப்பு மற்றும் அதியமான்கோட்டையில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளி இணைந்து இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தின. ஜூன் 14-ஆம் தேதி உலக இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களிடையே இரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மனிதநேயத்தின் அடையாளமாக, மாணவர்கள் இரத்தத் துளி வடிவில் அமர வைக்கப்பட்டு, சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. "மனிதநேயத்தின் ஒரு துளி இரத்ததானம் தாருங்கள்... உயிரைக் காப்பாற்றுங்கள்" என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. அடுத்த தலைமுறையினருக்கு இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு இரத்ததானத்தின் அவசியம், அதன் சமூகப் பயன் மற்றும் உயிர் காக்கும் தன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாருதி இரத்த வங்கி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் செந்தில் சி. கந்தசாமி, செயலாளர் தனசேகர், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் செந்தில் முருகன், தங்கம் மருத்துவமனை மருத்துவர் வானதி செந்தில், குழந்தைகள் நல மருத்துவர் தீபக், மாருதி இரத்த வங்கி வெங்கடாசலம் மற்றும் விஜய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், பள்ளி ஆசிரியர்கள் விஜய் வித்யா, ஷோபா, பரமேஸ்வரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ், விஜயகாந்த், ராஜ்குமார், ரோடா உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இரத்ததானம் குறித்த சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, உயிர் காக்கும் இந்த மனிதநேய சேவையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)