ஒகேனக்கல், ஜூன் 10:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பில்லிகுண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் கலைநிகழ்ச்சி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பில்லிகுண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஒரே மாதிரியான சீருடை அணிந்த பெண்கள், தாளத்திற்கு ஏற்ப கைகளைத் தட்டி, முருகப்பெருமானின் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வள்ளி திருமணக் கதைகளை பாடல்களாக பாடியபடி கும்மியடித்தனர்.
இந்த கண்கவர் கலைநிகழ்ச்சி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன், பாரம்பரிய நாட்டுப்புற கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்தது. பொதுவாக கோயம்புத்தூர், ஈரோடு, திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் நடைபெறும் இந்த பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம், ஊட்டமலையிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புற பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை ரசித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)