பாலக்கோடு, ஜூன் 10:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மழை வேண்டி 12 கிராம மக்கள் இணைந்து நடத்திய 18 நாள் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியின் நிறைவு நாளில் துரியோதனன் படுகளம் எனப்படும் பாரம்பரிய தெருக்கூத்து நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. தருமபுரி மாவட்டத்தில் மகாபாரத சொற்பொழிவுகள் நடத்தி, அதன் நிறைவாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தினால் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதனை முன்னிட்டு பனங்காடு, காவாப்பட்டி, சித்திரப்பட்டி, தொட்டம்பட்டி, வாழைத்தோட்டம், பாலக்கோடு உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பகல் நேரங்களில் வேதம் பயின்ற அறிஞர்கள் மகாபாரத கதைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். அதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் அந்தக் கதைகளுக்கு ஏற்ப கூத்து கலைஞர்கள் தெருக்கூத்து வடிவில் நிகழ்த்தி மக்களை கவர்ந்தனர்.
மகாபாரத சொற்பொழிவின் இறுதி நாளான 18-வது நாளில், “18-ம் போர்” என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டவர்கள் துரியோதனனை வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ பச்சையம்மன் இளைஞர் நற்பணி மன்றம், வெற்றிலை வியாபாரிகள் சங்கம் மற்றும் பனங்காடு ஊர் கவுண்டர் வகையார் குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வாக நடைபெற்ற துரியோதனன் படுகளத்தை காண பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)