பாலக்கோடு, ஜூன் 10:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட பஞ்சப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ.84.24 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.61.27 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, இ-பட்டா, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.2.11 லட்சம் மதிப்பில் சலவைப் பெட்டிகள் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளும், சுகாதாரத்துறையின் சார்பில் 10 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.20,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 11 விவசாயிகளுக்கு ரூ.65,600 மதிப்பில் ராகி மற்றும் துவரை சாகுபடிக்கான இடுபொருட்கள் வழங்கப்பட்டன. தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.71 லட்சம் மதிப்பில் நுண்ணீர் பாசனத் திட்ட மானிய உதவிகள் வழங்கப்பட்டன.
மகளிர் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பிலான சிறுதொழில் கடனுதவிகளும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் தொழில் முனைவுத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தொழிலாளர் பதிவு அட்டைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்புத்திட்ட முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற்று தங்களது வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முகாமில் பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களும் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் விரைவாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன், மகளிர் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) மு.செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)