தருமபுரி, ஜூன் 30:
கிராமப்புற மேம்பாடு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு, இந்திய அரசின் "VB GRAM G Act, 2025"-ன் அடிப்படையில் "VB GRAM G" என்ற புதிய திட்டம் 2026 ஜூலை 1 முதல் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கும் என்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலை செய்ததற்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படாவிட்டால், அதற்கான தாமத ஊதிய இழப்பீடு (Delayed Payment Provision) சட்டப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வேலைக்காக விண்ணப்பித்த பின்னர் 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாத பட்சத்தில், தகுதியான பயனாளிகளுக்கு வேலையின்மை உதவித்தொகை (Unemployment Provision) வழங்கும் வகையிலும் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT)
இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, பயனாளிகளின் ஊதியம் மற்றும் அனைத்து நிதியுதவிகளும் Direct Benefit Transfer (DBT) முறையில் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன்மூலம் இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், நிர்வாகத் தாமதமும் குறைந்து, வெளிப்படையான நிதி பரிவர்த்தனை உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்
கிராம ஊராட்சி (Panchayat Raj Institutions - PRI) அமைப்புகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், திட்ட நிதி நேரடியாக ஊராட்சி கணக்குகளுக்கும், பயனாளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிர்வாகத் தன்னாட்சி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
வெறும் வேலைவாய்ப்பு திட்டமாக மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்ற நிலையான சொத்துகளை உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. நீர் வளங்களைப் பாதுகாத்தல், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வாழ்வாதார முன்னேற்றப் பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்ந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் பின்தங்கியோருக்கு முன்னுரிமை
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள், பெண்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு தனித்துவமான ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெறுவதோடு, வேலைவாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் நிலையும் குறையும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
318 வகையான பணிகளுக்கு அனுமதி
இத்திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்புப் பணிகள், அடிப்படை ஊரக கட்டமைப்பு பணிகள், ஊரக வாழ்வாதார மேம்பாட்டு பணிகள், பேரிடர் மேலாண்மை பணிகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 318 வகையான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ஜெ. ரூபன் சங்கர் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், நிலையான வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)