Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பென்னாகரம், ஜூன் 09:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஒகேனக்கல் - பென்னாகரம் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் அடுத்த அஞ்சேஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பி.அக்ரஹாரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு வார காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், குடிநீருக்காக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.


குடிநீர் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஒகேனக்கல் - பென்னாகரம் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது என கூறப்படுகிறது. குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies