தருமபுரி, ஜூன் 16:
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமான (UYEGP - Unemployed Youth Employment Generation Programme) மூலம் சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியம் பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் மற்றும் சேவைத் துறைகள் சார்ந்த பல்வேறு தொழில்களை தொடங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டு தொகையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுவதுடன், அதிகபட்ச மானியத் தொகை ரூ.3.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
UYEGP திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வித் தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 45 வயதும், ஆதி திராவிடர், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 55 வயதும் ஆகும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
எந்தெந்த தொழில்களுக்கு கடன்?
அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து வகையான வணிக மற்றும் சேவைத் தொழில்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
குறிப்பாக:
- மளிகைக் கடை
- பெட்டிக் கடை
- பேன்சி ஸ்டோர்
- ஸ்டேஷ்னரி கடை
- மொபைல் மற்றும் மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம்
- வாகன உதிரிபாகங்கள் கடை
- சிறு வணிக நிறுவனங்கள்
- சேவைத் தொழில்கள்
உள்ளிட்ட பல்வேறு தொழில்களை தொடங்குவதற்கு இந்த திட்டம் சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தருமபுரி மாவட்ட தொழில் மையத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு திட்டம் குறித்த விவரங்களை அறிந்து பயன்பெறலாம்.
தொடர்புக்கு
தொலைபேசி எண்கள்:
- 89255 33941
- 89255 33942
- 04342 – 230892
படித்த வேலையற்ற இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொழில் முனைவோராக உருவாக விரும்பும் இளைஞர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)