தருமபுரி, ஜூன் 3:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு புதுப்பட்டாணியர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அப்துல்சலாம் மகள் சகானாமைதி (20), தனது 2 மாத ஆண் குழந்தைக்கு அவசர இதய சிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். சகானாமைதி, பத்ரிநாராயணமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இத்தம்பதியருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த சில நாட்களிலேயே குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதுடன், இதயத்திற்கு ரத்தம் செலுத்தும் வால்விலும் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும், குழந்தைக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்க சென்னை, மதுரை உள்ளிட்ட சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதற்கான வசதிகள் உள்ளூர் அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினக்கூலி தொழிலாளர்களான தங்களால் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளை சமாளிக்க இயலாத நிலை உள்ளதாகவும், தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் மற்றும் அரசு உரிய மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றும் குழந்தையின் தாய் சகானாமைதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தை உயிருக்கு போராடி வரும் நிலையில், அதனை காப்பாற்ற ஏழைத் தாய் மேற்கொண்டு வரும் போராட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)