தருமபுரி, ஜூன் 13:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் உள்வட்டத்திற்குட்பட்ட தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் நடைபெற்று வரும் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பு மற்றும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆய்வின்போது, தொப்பூர் கணவாயில் தொடர் விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், உயர்மட்ட மேம்பாலம் தொடங்கும் பகுதி, கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில் அருகில் அமைக்கப்படும் சிறிய சுரங்கப்பாதை, அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இரட்டை பாலம் பகுதி மற்றும் எலிவேட்டட் காரிடார் நிறைவடையும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு தனித்தனி வழித்தடங்களை ஏற்படுத்தி பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பணிகள் நடைபெற்று வருவதை வாகன ஓட்டிகள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதற்காக 50 மீட்டர் இடைவெளியில் மின்விளக்கு எச்சரிக்கை கருவிகள் (Blinkers), பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள், வேகக் கட்டுப்பாட்டு பட்டைகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் "Work in Progress" அறிவிப்பு பலகைகள் போதுமான அளவில் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார்.
தொப்பூர் கணவாய் முதல் தொப்பூர் இரட்டை பாலம் வரை தற்போது உள்ள மையத் தடுப்பு (Centre Median) இடைவெளியை தேவையான அளவில் குறைத்து, சாலையை அகலப்படுத்தி இருவழிப் போக்குவரத்தும் பாதுகாப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூடுதலாக சிமெண்ட் தடுப்புகள் மற்றும் கிராஷ் பேரியர் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தொப்பூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திட்ட இயக்குநர் அலுவலகத்தில் உயர்மட்ட மேம்பாலத் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் பணிகளின் முன்னேற்றம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் திட்ட நிறைவு கால அட்டவணை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநர் திரு. சீனிவாசலு, மாவட்ட வன அலுவலர் ராஜங்கம் இ.வ.ப., தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிவராமன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. சி.க. ஜெயதேவ்ராஜ், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் திட்டப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெற்று வரும் இந்த உயர்மட்ட மேம்பாலத் திட்டம் நிறைவடைந்தால், நீண்டகாலமாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயங்கள் வெகுவாக குறையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவுகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)