தருமபுரி, ஜூன் 7:
ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த பிக்கப் வாகன ஓட்டுநர் ஒருவர் காவிரியாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆவளப்பள்ளி, தோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மகன் குமார் (35). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிக்கப் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், குமார் தனது நண்பர் குமரேசனுடன் நேற்று மகேந்திரா பிக்கப் வாகனத்தில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஊட்டமலை ஐயப்பன் கோவில் தெருவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, பரிசல் துறை அருகே உள்ள காவிரியாற்றில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, குமார் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது திடீரென நீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் மற்றும் அப்பகுதியினர் உடனடியாக ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு குமாரை சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)