Type Here to Get Search Results !

புதிய மாவட்ட ஆட்சியர் சரவணன் ஐ.ஏ.எஸ்.க்கு வாழ்த்து: பத்திரிகையாளர்கள் நலன் தொடர்பான கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.


தருமபுரி, ஜூன். 02:


தருமபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சரவணன், இ.ஆ.ப., அவர்களை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், பத்திரிகையாளர்களின் நீண்டகால கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினர். தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் செய்தித் தொடர்பாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தனர்.


அப்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன், துணைத் தலைவர் ரவி, நந்தகுமார், இணைச் செயலாளர்கள் குருபிரசாத், சிங்காரவேலு, துணைச் செயலாளர்கள் அருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பாலு, ஜெயம் சுரேஷ், கோவிந்தசாமி, பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆட்சியருக்கு பூங்கொத்து வழங்கி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தொடர்ந்து, பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அந்த மனுவில், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலி வீட்டுமனைகளில் மத்திய அல்லது மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


மேலும், இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமல் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், நலவாரிய அட்டை பெறாமல் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் நலவாரிய அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


அதேபோல், மறைந்த கலைஞர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் வேணுகோபால் அவர்களின் திருவுருவப் படத்தை பத்திரிகையாளர் அலுவலகத்தில் திறந்து வைத்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மாவட்டம் மற்றும் தாலுகா பகுதிகளில் பத்திரிகையாளர் என்ற பெயரில் செயல்பட்டு பொய்யான தகவல்களை பரப்பி, ஊடகத் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் போலி பத்திரிகையாளர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies