Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.



பாலக்கோடு, ஜூன்.02:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டுப்பாடின்றி நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


பாலக்கோடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து நிலைய வளாகத்திற்குள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதுடன், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருவதால் பயணிகளின் நடமாட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், சிலர் காலை நேரத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்திவிட்டு வெளியூர் பணிகளுக்கு சென்று, இரவு நேரத்தில் மீண்டும் வந்து வாகனங்களை எடுத்துச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக பேருந்து நிலையம் பயணிகளுக்கான இடமாக இல்லாமல், நிரந்தர இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவியர்கள் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சட்டவிரோதமாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாத சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies