தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், நந்தகுமார், இணைச் செயலாளர் சிங்காரவேலு, துணைச் செயலாளர் அருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பாலு, ஜெயம் சுரேஷ், பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதனை நேரில் சந்தித்தனர். அப்போது அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய சங்க நிர்வாகிகள், பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
மனுவில், பத்திரிகையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள காலி வீட்டுமனைகளில் மத்திய அல்லது மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டித்தர வேண்டும், வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமல் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், நலவாரிய அட்டை பெறாத தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த கலைஞர் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் வேணுகோபாலின் திருவுருவப் படத்தை பத்திரிகையாளர் அலுவலகத்தில் திறந்து வைத்து மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அதேபோல், பத்திரிகையாளர் என்ற பெயரில் செயல்பட்டு போலி செய்திகளை பரப்பி, பத்திரிகையாளர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் போலி பத்திரிகையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுபட்ட தகுதியான பத்திரிகையாளர்களுக்கு அரசு பேருந்து அடையாள அட்டைகள் வழங்குதல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான அரசு அங்கீகார ஸ்டிக்கர்கள் வழங்குதல், மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்கள் என பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமமான மரியாதை வழங்குதல், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு மாவட்டத்திற்குட்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு பெற்றுத்தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)