பாலக்கோடு, ஜூன் 5:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
பாலக்கோடு பகுதி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட முக்கிய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடி கருகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ள விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால், இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீராதாரங்கள் வறண்டுள்ளன. இதனால் குடிநீர் மற்றும் பாசன நீருக்காக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், தூள்செட்டி ஏரி, என்னேகொல்புதூர் நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ஓகேனக்கல் உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு நிரந்தர தீர்வு காணவும், நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)