தருமபுரி, ஜூன் 10:
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டம் தருமபுரி மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை செயல்பாட்டை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் திரு. விஜய், கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, பொதுஇடங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது, இணையவழி தொல்லைகள் மற்றும் பாலியல் குற்றங்களை கண்காணித்து விரைந்து நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு, தனித்துவமான வாகனங்கள், நவீன தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இந்த படையின் முக்கிய பணியாகும்.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
மாநில அளவில் இந்த திட்டத்திற்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் டிரோன் கண்காணிப்பு உள்ளிட்ட முறைகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)