தருமபுரி, ஜூன் 10:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 75 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (10.06.2026) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., தலைமை தாங்கினார்.
இம்முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) திரு. ஸ்ரீதரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டனர். முகாமின் போது பொதுமக்கள் அளித்திருந்த 75 மனுக்கள் மீது நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய முகாமில் புதிதாக 32 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கும், காவல்துறை சேவைகளை மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)