பாலக்கோடு, ஜூன் 8:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலையில் சாலையோரங்களில் அழுகிய மாம்பழங்கள் கொட்டப்பட்டுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாலக்கோடு புறவழிச்சாலை கணபதிகொட்டாய் எதிரே பல்வேறு இடங்களில் அழுகிய மாம்பழக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மாங்காய் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டிகளில் இருந்து அகற்றப்படும் அழுகிய மாம்பழங்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் சாலையோரங்களில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், மாம்பழங்களை வேகமாக பழுக்க வைப்பதற்காக ரசாயன கலந்த ஸ்பிரேக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், தற்போது கொட்டப்பட்டுள்ள மாம்பழங்களும் அவ்வாறு ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சாலையோரங்களில் அழுகிய பழங்கள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் மட்டுமின்றி ஈக்கள், பூச்சிகள் அதிகரித்து சுகாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கைப் பிடித்தபடி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஜெர்த்தலாவ் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள மாம்பழக் கழிவுகளை அகற்றி, சுகாதார சீர்கேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)