தருமபுரி, ஜூன் 8:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், ஒழித்தல் மற்றும் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு, சட்டவிரோத மதுபான விற்பனை தடுப்பு, போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு (NCORD) தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் இன்று (08.06.2026) நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில், அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக சந்துக்கடைகள் மூலம் விற்பனை செய்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், கல்வி நிலையங்களை ஒட்டியுள்ள மளிகைக் கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதில்லை” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., உதவி ஆணையர் (ஆயம்) திரு. கோ. கோபு, மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சந்திரசேகரன், மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத் துறை) மருத்துவர் பி.கே. கைலாஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)