தருமபுரி, ஜூன் 5:
அழிந்து வரும் அரிய வகை உயிரினமான தேவாங்கை பிடித்து கடத்தி வந்த நபரை பாலக்கோடு வனத்துறையினர் கைது செய்து, தேவாங்கை மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். தமிழகத்தில் திருவண்ணாமலை வனப்பகுதிகளில் காணப்படும் அரிய வகை உயிரினமான தேவாங்கு (Slender Loris) அழியும் நிலையில் உள்ள உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த உயிரினங்களை சிலர் சட்டவிரோதமாக பிடித்து ஜோதிடம் உள்ளிட்ட மூடநம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாலக்கோடு பகுதியில் சிலர் தேவாங்குகளை பயன்படுத்தி வருவதாக தருமபுரி மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கோடு வனக்காவலர்கள், பாலக்கோடு அருகே உள்ள கல்கூடப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சோதனை செய்தபோது, கூண்டில் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த தேவாங்கு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் நல்லான்பிள்ளைபெற்றால் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (50) என்பதும், திருவண்ணாமலை காப்புக்காட்டில் இருந்து தேவாங்கை பிடித்து விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குமரேசனை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்த தேவாங்கை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
கூண்டில் உயிருடன் மீட்கப்பட்ட தேவாங்கு, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)