Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே உடைந்த ஓகேனக்கல் குடிநீர் குழாய்: சாலையில் வீணாகும் குடிநீர், நடவடிக்கை கோரும் பொதுமக்கள்.


பாலக்கோடு, ஜூன் 5:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக குடிநீர் சாலையில் வீணாகி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால் ஆறுகள், குளங்கள், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குடிநீருக்காக பல பகுதிகளில் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், பாலக்கோடு அருகே திம்மம்பட்டி சர்க்கரை ஆலை முன்பாக செல்லும் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து, கடந்த ஒரு வாரமாக குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


ஒருபுறம் குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் குடிநீர் வீணாகி வருவது வேதனையளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த குழாய் பழுதால் அப்பகுதியில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


எனவே, குடிநீர் வீணாவதை உடனடியாக தடுத்து, உடைந்துள்ள குழாயை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies