Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி ஆய்வு: விதிமுறைகளை மீறிய 9 கடைகளுக்கு ரூ.9,000 அபராதம்.

\\

பென்னாகரம், ஜூன் 11:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், துரித உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய 9 கடைகளுக்கு மொத்தம் ரூ.9,000 அபராதம் விதிக்கப்பட்டது.


பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.


பென்னாகரம் பேருந்து நிலையம், மஜீத் கோயில் தெரு, தருமபுரி சாலை, காவேரி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு உணவகங்கள், துரித உணவகங்கள் (Fast Food Centres) மற்றும் பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


ஆய்வின்போது, சில கடைகளில் உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் கையாளப்பட்டதும், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படாததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட 9 கடைகளுக்கு, அதில் 7 உரிமையாளர்களுக்கு, உடனடி அபராதமாக (Spot Fine) மொத்தம் ரூ.9,000 விதிக்கப்பட்டது.


மேலும், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், தரமற்ற அல்லது சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பொதுமக்களின் நலன் கருதி இதுபோன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies