தருமபுரி, ஜூன் 7:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் சாலையோர மக்களின் பசியைப் போக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ‘பசி போக்கும் கரங்கள்’ அமைப்பு, தனது சேவையின் 150-ஆவது நாளை கேக் வெட்டி கொண்டாடியது.
மனிதநேய சேவைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த அமைப்பு, கடந்த 150 நாட்களாக தொடர்ந்து ஆதரவற்றோர், ஏழை எளியோர் மற்றும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது. பசியால் வாடும் மக்களுக்கு வயிறார உணவளிக்கும் இச்சேவை, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
150-ஆவது நாள் சேவையை முன்னிட்டு, அமைப்பின் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினர். சேவைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைப்பின் நிர்வாகிகள், உணவு தயாரித்து வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தன்னார்வலர்களுக்கும், நிதியுதவி மற்றும் பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
மேலும், ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் இந்த மனிதநேய சேவை தொடர்ந்து நீடித்து, மேலும் பலருக்கு உதவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ‘பசி போக்கும் கரங்கள்’ அமைப்பின் இந்த சேவை, மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)