காரிமங்கலம், ஜூன் 10:
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஆறாவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், காரிமங்கலம் கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அடிலம், இண்டமங்கலம், ஏ.முருக்கம்பட்டி, பைசுஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து, தமக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ததற்காக அவர் நன்றியை தெரிவித்தார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் எம்.எல்.ஏ.வை உற்சாகமாக வரவேற்றனர். பல்வேறு கிராமங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது பொதுமக்களிடம் உரையாற்றிய கே.பி.அன்பழகன், தங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், மக்களின் தேவைகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் உறுதியளித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் ஒன்றிய, கிளை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)