Type Here to Get Search Results !

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: பட்டா, நில அளவை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பொதுமக்கள் மனு.


பாலக்கோடு, ஜூன் 16:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புலிக்கரை பிர்காவிற்கு உட்பட்ட 8 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பி.கே. கோவிந்தன் தலைமை தாங்கினார்.


இந்த ஜமாபந்தியில் புலிக்கரை, காட்டம்பட்டி, செல்லியம்பட்டி, செக்கோடி, பி. கொல்லஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, மோதுகுலஅள்ளி மற்றும் பூகானஅள்ளி உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். பொதுமக்கள் பட்டா மாறுதல், நில அளவை, புதிய குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), இலவச வீட்டுமனைப் பட்டா, பெயர் திருத்தம், உட்பிரிவு பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.


மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர், ஒவ்வொரு மனுவின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தகுதியான மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வரும் வருவாய் பதிவேடுகள், நில அளவை பதிவுகள், நில அளவை உபகரணங்கள் மற்றும் வருவாய்த் துறையின் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சரிபார்த்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.


ஜமாபந்தி என்பது பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வருவாய் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கும் முக்கிய நிகழ்வாக இருப்பதால், கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், துணை தாசில்தார்கள் காமராஜர், ஆறுமுகம், மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ், மாதேஷ், சின்னசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சிங்காரவேலன், வருவாய் ஆய்வாளர் யசோதா, நில அளவையர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பரத்தொடர்புக்கு : 9843663662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies