மொரப்பூர், ஜூன். 16:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், இராணிமூக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட முனியன்கொட்டாய் கிராமத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்கவும், புதிய விளக்கை அமைக்கவும் தொடர்ந்து மூன்று முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது மேல்முறையீட்டு மனுவுக்காவது நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த 19.04.2026 அன்று முதல்வரின் தனிப்பிரிவிற்கு இணையம் வழியாக அப்பகுதி சமூக ஆர்வலர் மூலம் அளிக்கப்பட்ட முதல் மனுவில், முனியன்கொட்டாய் மற்றும் பெருமாள்கோவில்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களுக்கு பொதுவான முக்கிய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கு 6 மாதங்களுக்கும் மேலாக செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வீசிய பலத்த காற்றின் காரணமாக அந்த உயர் கோபுர மின் விளக்கு முற்றிலும் சாய்ந்துவிட்டது. இதையடுத்து 14.05.2026 அன்று அளிக்கப்பட்ட இரண்டாவது மனுவில், பழுதடைந்த விளக்கை அகற்றி புதிய உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 15.05.2026 அன்று கிடைத்த பதிலில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது, முதல்வரின் தனிப்பிரிவில் கொடுக்கப்படும் மனுவிற்கு 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலக்கெடு முடிந்த பின்னரும் புதிய உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படாததால், 16.06.2026 அன்று மூன்றாவது முறையாக மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. மேலும், முனியன்கொட்டாய் கிராமத்தில் செயல்படாத நிலையில் உள்ள தெரு மின் விளக்குகளையும் முழுமையாக ஆய்வு செய்து, பழுதடைந்த விளக்குகளை மாற்றி சீரமைக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மூன்றாவது மேல்முறையீட்டு மனுவுக்காவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ளது. புதிய உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு, கிராமத்தின் அனைத்து தெரு மின் விளக்குகளும் சீரமைக்கப்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.gif)

.jpg)
.jpg)