Type Here to Get Search Results !

தருமபுரியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி.



தருமபுரி, மே 30 :


தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவற்றை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்மாட்டுக்கானூர், மேல்மாட்டுக்கானூர், கடகத்தூர், மேட்டுத்தெரு, அதகபாடி, ஏரிகோடி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற சௌமியா அன்புமணி, பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் அடிப்படை வசதி கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.


அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், “என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். குறிப்பாக ‘சந்து கடைகள்’ தொடர்பாக சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்வியின் மூலம், தமிழகம் முழுவதும் அந்த விவகாரம் கவனத்திற்கு வந்தது. அதன் பின்னர் பல பகுதிகளில் சந்து கடைகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.


மேலும், “மது பழக்கத்தால் பல இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவது சமூக நலனுக்குத் தேவையான ஒன்று. பொதுமக்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என உறுதியளித்தார்.


சிப்காட் திட்டம் குறித்து பேசிய அவர், “சிப்காட் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு 9 தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவை செயல்பாட்டிற்கு வந்தால் தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார்.


மேலும், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற்று திட்டத்தை நிறைவேற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், ஒன்றிய தலைவர் தங்கதுரை, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies