Type Here to Get Search Results !

நல்லம்பள்ளியில் ஜமாபந்தி தொடக்கம்: ஒரே நாளில் 256 மனுக்கள் பெறப்பட்டது; விரைந்து தீர்வு காண ஆட்சியர் உத்தரவு.


நல்லம்பள்ளி, ஜூன் 16:


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று தொடங்கியது.


தருமபுரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜூன் 16 முதல் 19 வரை ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.


இன்றைய முதல் நாள் ஜமாபந்தி நல்லம்பள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட இலளிகம், மாதேமங்கலம், பூதனஅள்ளி, பாலஜங்கமனஅள்ளி, ஏ.ஜெட்டிஅள்ளி, தடங்கம், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, மிட்டாரெட்டிஅள்ளி மற்றும் மிட்டாதின்னஅள்ளி உள்ளிட்ட 10 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.


ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், நிலம் தொடர்பான மனுக்கள், பட்டா பெயர் திருத்தம், உட்பிரிவு பட்டா, வாரிசுச் சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 256 மனுக்கள் பெறப்பட்டன.


பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து, தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் பதிவேடுகள், பட்டா-சிட்டா பதிவேடுகள், வரி வசூல் பதிவேடுகள், நில அளவை பதிவுகள், கிராம கணக்குகள் மற்றும் நில அளவை கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.


நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் ஜூன் 17-ஆம் தேதி பாளையம் உள்வட்டம் மற்றும் ஜூன் 18-ஆம் தேதி இண்டூர் உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் திரு. செந்தில்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு. பிரசன்னமூர்த்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies