Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி குப்பைக் கழிவுகள் விவசாய நிலங்களில் கொட்டப்படுவதாக புகார்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


பாலக்கோடு, ஜூன் 16:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாலக்கோடு பேரூராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் விவசாய நிலங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.


பாலக்கோடு – பொப்புடி சாலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை தரம் பிரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்பட வேண்டிய நிலையில், அவை முறையாக கையாளப்படாமல் அருகிலுள்ள விவசாய நிலங்களில் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


இந்த புகாரின் அடிப்படையில் பாலக்கோடு பேரூர் தமிழக வெற்றிக்கழக செயலாளர் விக்னேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருத்துவக் கழிவுகள், கண்ணாடி துண்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான திடக்கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படாமல் அப்படியே விவசாய நிலங்களில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லோடுகள் அளவிற்கு கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காற்றின் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அருகிலுள்ள விளைநிலங்களில் பறந்து செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மேலும், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் திறந்தவெளியில் கொட்டப்படுவது சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பாலக்கோடு பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, விவசாய நிலங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி, குப்பை மேலாண்மை பணிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies