தருமபுரி, ஜூன் 6:
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசிய ஜவாஹிருல்லா, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்த அணை கட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், குறிப்பாக நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து பேசிய அவர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றி வரும் இத்திட்டத்திற்கான நிதி கடந்த சில ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவரது அரசியல் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
மேலும், தருமபுரி மாவட்டம் பி. துறிஞ்சிப்பட்டி பகுதியில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)