தருமபுரி, ஜூன் 8:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2026-ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட நிரலின்படி, Group-I பதவிகளுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வரும் 23.06.2026 அன்று வெளியிடப்பட உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த Group-I தேர்வின் மூலம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), உதவி ஆணையர் (தொழிலாளர்), உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட உயர்நிலை அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Group-I முதல்நிலைத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 12.06.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் தேர்வர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சிறுதேர்வுகள் மற்றும் முழுமையான மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
மேலும், தேர்வர்களின் பயன்பாட்டிற்காக பள்ளிப் பாடப்புத்தகங்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட இலவச நூலகம், தனிப்பட்ட பயிலக வசதி, இலவச Wi-Fi மற்றும் கணினி பயன்பாட்டு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் கீழ்க்கண்ட பதிவு இணைப்பின் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்:
பதிவு இணைப்பு: https://rb.gy/xk1c88
மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 04342-288890 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)