தருமபுரி, ஜூன் 8:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 590 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (08.06.2026) நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா கோரிக்கை, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 590 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், பெறப்பட்ட அனைத்து மனுக்களும் தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, தகுதியான மனுக்களுக்கு அரசின் விதிமுறைகளின்படி விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது அலுவலர்கள் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்துள்ள இரண்டு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ஆணைகளும், இரண்டு தொழிலாளர்களுக்கு ரூ.2,400 மதிப்பிலான ஓய்வூதிய உதவித்தொகை ஆணைகளும் வழங்கப்பட்டன.
மேலும், கடந்த வார மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த ஒருவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணையும் வழங்கப்பட்டது. அதேபோல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் எட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.03 லட்சம் மதிப்பிலான திறன்பேசிகள் மற்றும் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் ஒரு மாணவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 உதவித்தொகைக்கான ஆணையும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) மு. செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பெ.கி. கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மனோஜ் முனியன் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)