Type Here to Get Search Results !

ஒகேனக்கலில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்பு


தருமபுரி, ஜூன் 6:


ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் "வாங்க கற்றுக் கொள்வோம்; தீ பாதுகாப்பை அறிவோம், உயிர்களைக் காப்போம்" என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உத்தரவின் பேரில் ஒகேனக்கல் பொறுப்பு நிலைய அலுவலர் முனுசாமி முன்னிலையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் நவீன தீயணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சமையல் எரிவாயு கசிவு, மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு வகையான தீ விபத்துகளின் போது எந்த வகையான கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


அதேபோல், அவசர காலங்களில் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது எப்படி, புகை சூழ்ந்த இடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதற்கான செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.


தொடர்ந்து, ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆற்றங்கரை மற்றும் அருவி பகுதிகளில் குளிக்கும் போது ஏற்படக்கூடிய விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


மேலும், அவசரநிலை ஏற்பட்டால் அருகிலுள்ள தீயணைப்பு நிலையங்களை எவ்வாறு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டன. விபத்தில்லா சூழலை உருவாக்கவும், அவசர காலங்களில் துரிதமாக செயல்பட்டு உயிர் சேதத்தைத் தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தீயணைப்புத் துறையினர் கேட்டுக்கொண்டனர்.


இந்நிகழ்வில் ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் முனுசாமி, இளவரசன், சேவகன், சிவா உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies