பாலக்கோடு, ஜூன் 09:
தருமபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா அவர்களின் உத்தரவின்படி, பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் “வாங்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் இரு நாள் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் திருத்தணி முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில், மின்சாரக் கசிவால் ஏற்படும் தீ விபத்துகள், சமையல் எரிவாயு (காஸ்) தீ விபத்துகள், பட்டாசு தீ விபத்துகள், வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அவசர சூழல்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேலும், தீயணைப்பான் கருவிகளின் வகைகள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் தீ விபத்து நேரங்களில் அவற்றை பாதுகாப்பாக கையாளும் முறைகள் குறித்து செய்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் நவீன தளவாடங்கள், மீட்புப் பணிக்கான உபகரணங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு நேரடி விளக்கமும் அளிக்கப்பட்டது. இதனால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பயிற்சி முகாமின் நிறைவில், தீ விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அவசர கால பாதுகாப்பு நடைமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அமைந்தது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)