தருமபுரி, ஜூன் 09:
தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான தினக்கூலியை வழங்காமல் ஏமாற்றி வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி. குட்டியப்பன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 2டி (62)-ன் படி தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் நாளொன்றுக்கு ரூ.745 தினக்கூலி வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஒப்பந்ததாரர் நாளொன்றுக்கு ரூ.410 மட்டுமே வழங்கி வருவதாக குற்றம்சாட்டினர்.
இதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளரிடமும் தினமும் ரூ.335 வீதம் குறைத்து வழங்கப்படுவதாகவும், மாதத்திற்கு ரூ.10,050 வரை தொழிலாளர்கள் இழப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், கடந்த 13 மாதங்களாக இந்த நிலை நீடித்து வருவதால் ஒரு தொழிலாளருக்கு சுமார் ரூ.1.30 லட்சம் நிலுவை தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் 130 ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடமிருந்து மொத்தமாக ரூ.1.70 கோடிக்கும் மேற்பட்ட தொகை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
எனவே, தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையை உடனடியாக வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் சி. நாகராசன், மாவட்ட பொருளாளர் எஸ். சண்முகம், மாவட்ட துணைத் தலைவர்கள் சி. ரகுபதி, சி. அங்கம்மாள், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் எம். வெங்கடேசன், ஜி. வள்ளி, ஏ. சத்யா, ஏ. சின்னசாமி, வி. சிவா, ஜி. ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)