தருமபுரி, ஜூன் 3:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் ஜெர்தலாவ் கால்வாயில் இருந்து புலிகரை ஏரி வரை சுமார் 5 ஆயிரம் மீட்டர் நீளத்தில் நீர்வழிக்கால்வாய் அமைத்து 12 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திறந்தவெளி கால்வாய் அமைப்புக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேடியப்பன் (46) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் வழியாக கால்வாய் தோண்டும் பணி இன்று தொடங்கப்பட்டது. சுமார் 40 அடி ஆழம் மற்றும் 50 அடி அகலத்தில் கால்வாய் அமைப்பதற்காக ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த விவசாயிகள், திறந்தவெளி நீர்வழிக்கால்வாய் அமைப்பதால் பல்வேறு பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறி பணிகளை தற்காலிகமாக நிறுத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நீர்வளத் துறை செயற்பொறியாளர் கணேஷ், திட்டப்பணிகளை தொடர அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், 40 அடி ஆழத்தில் திறந்தவெளி கால்வாய் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், கால்நடைகள் தவறி கால்வாயில் விழுந்தால் அவற்றை மீட்பது கடினமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
எனவே திறந்தவெளி கால்வாய்க்கு பதிலாக பைப்லைன் மூலம் நீரை கொண்டு சென்று, தோண்டப்படும் பகுதியை பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே பணிகளை தொடர அனுமதிப்போம் என்றும் தெரிவித்தனர்.
அத்துடன், தமிழக முதலமைச்சர் தங்களது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)