தருமபுரி, ஜூன் 29:
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் சரத்குமார் தொடர்பான போதைப்பொருள் குற்றச்சாட்டு விவகாரத்தை கண்டித்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் ஆ. மணி எம்.பி. மற்றும் பி. பழனியப்பன் தலைமையேற்க இருந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இருப்பினும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திரண்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், நகரச் செயலாளர் நாட்டார் மாது, மாணவரணி நிர்வாகி அன்பரசன், சுந்தர், இளைஞரணி நிர்வாகிகள் சிவகுரு, அசோக் குமார், கலைச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தருமபுரி நகரில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)