தருமபுரி, ஜூன் 29:
தருமபுரி மாவட்டம் அரியாகுளத்தைச் சேர்ந்த விவசாயி நிஜாமுதீன் (68), சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பேரிச்சம்பழ மரங்களை தனது விவசாய நிலத்தில் வளர்த்து, கடும் வறட்சியிலும் அதிக மகசூல் பெற்று மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
சவுதி அரேபியாவில் பேரிச்சை தோட்டங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து உயர்தர பேரிச்சை திசு வளர்ப்பு கன்றுகளை இறக்குமதி செய்து முதலில் சோதனை முறையில் சாகுபடி மேற்கொண்டார். நல்ல விளைச்சல் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது 15 ஏக்கர் பரப்பளவில் பேரிச்சை சாகுபடி செய்து வருகிறார்.
அவரது தோட்டத்தில் பர்ஹி (Barhi), கஞ்சி (Khunizi), நூர் (Noor) உள்ளிட்ட பல்வேறு உயர்தர பேரிச்சை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. தருமபுரியின் கடுமையான வறட்சி மற்றும் வெப்பநிலையையும் தாங்கி இந்த மரங்கள் சிறப்பாக வளர்ந்து, தொடர்ந்து நல்ல மகசூல் அளித்து வருகின்றன.
இதுகுறித்து விவசாயி நிஜாமுதீன் கூறுகையில், "ஒரு கிலோ பேரிச்சம்பழம் ரூ.200 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. மொத்த வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கே வந்து பழங்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். பேரிச்சை மரங்கள் சுமார் 90 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியவை. தமிழகத்தில் பேரிச்சை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியம் வழங்கினால், மேலும் பல விவசாயிகள் இச்சாகுபடியில் ஈடுபட முன்வருவார்கள்" என்றார்.
குறைந்த நீர் தேவையுடன், வறட்சியிலும் நல்ல வருமானம் ஈட்டித் தரும் பேரிச்சை சாகுபடி, தருமபுரி மாவட்ட விவசாயிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)