Type Here to Get Search Results !

சனத்குமார் நதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு: ஒரு வாரத்தில் நடவடிக்கை இல்லை என்றால் சாலை மறியல் என பாஜக எச்சரிக்கை.


பாலக்கோடு, ஜூன் 23:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சனத்குமார் நதியில் கோழி, ஆடு, மாடு இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு நீர் மாசுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜகவினர், உடனடியாக தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான கணபதிகொட்டாய், ஜெர்தலாவ், சித்திரைப்பட்டி, பூவன்கொட்டாய், கொட்டாவூர், மல்லசமுத்திரம், காவாப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய நீராதாரமாக சனத்குமார் நதி விளங்கி வருகிறது. பஞ்சப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் நீர், இந்த நதி வழியாக தும்பலஅள்ளி அணையை சென்றடைகிறது.


இந்நிலையில், பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகள் மற்றும் கோழி, ஆடு, மாடு இறைச்சி கழிவுகள் நதியில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், கடுமையான சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாலக்கோடு பேரூராட்சியில் புகார் அளித்தால் சம்பவ இடம் ஜெர்தலாவ் ஊராட்சிக்குட்பட்டது எனவும், ஜெர்தலாவ் ஊராட்சியில் புகார் அளித்தால் பாலக்கோடு நகரப்பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அசுத்தப்படுத்துகின்றனர் எனவும் கூறி அதிகாரிகள் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


கோயில்களில் புனித நீராட்டல் மற்றும் கங்கை பூஜை உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஆற்று நீர் தற்போது மாசடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டிற்கான நீர்நிலையாக உள்ள இந்த நதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பாஜக நகர மண்டல அமைப்பாளர் பெரியசாமி தலைமையில் கட்சியினர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். சனத்குமார் நதியை மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நதியில் தேங்கியுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வார காலத்திற்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நதியை தூய்மைப்படுத்தாவிட்டால், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies