தருமபுரி, ஜூன் 6:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் தருமபுரியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஏக்னஸ் கோன்ஷா தனது கூந்தலை தானமாக வழங்கி மனிதநேயச் செயலால் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
மை தருமபுரி அமைப்பு சார்பில் பல்வேறு சமூக நல மற்றும் மனிதநேய சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்காக இரத்த தானம், தட்டணு தானம் உள்ளிட்ட சேவைகளுடன், கூந்தல் தானம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக ஏற்படுவதால், அவர்களுக்கான செயற்கை தலைமுடி தயாரிப்பதற்காக கூந்தல் தானம் வழங்கும் திட்டத்தை மை தருமபுரி அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி அதியமான் கோட்டை பகுதியில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஏக்னஸ் கோன்ஷா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கினார்.
மாணவியின் தந்தை அரூர் வட்டாரத்திலுள்ள வள்ளி மதுரை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது தாயார் அலமேலு குடும்பத் தலைவியாக உள்ளார். நிகழ்ச்சியில் மாருதி இரத்த வங்கி நிறுவனர் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம் மற்றும் கணேஷ் ஆகியோர் மாணவியின் கூந்தல் தானத்தை பெற்றுக்கொண்டனர்.
மாணவி ஏக்னஸ் கோன்ஷாவின் மனிதநேய செயலை பாராட்டிய மை தருமபுரி அமைப்பினர், அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)