Type Here to Get Search Results !

பொம்மிடி ரயில் நிலையம் முன்பு பயணிகள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பொம்மிடி, ஜூன் 13:


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி ரயில் நிலையம் முன்பு, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆசாம்கான் தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் சங்கீதாஸ்ரீ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


ஆர்ப்பாட்டத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் 56108 மற்றும் 56812 எண் கொண்ட ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக இயக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ரயில்கள் லோக்கூர் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதற்கு மாற்றாக, பொம்மிடி ரயில் நிலையத்தில் லூப் லைனில் நான்காவது நடைமேடை அமைத்து ரயில்களை நிறுத்துவதன் மூலம் காலதாமதத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், காலை நேரத்தில் இயக்கப்படும் ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலின் நேர அட்டவணையை மாற்றி, மேட்டூர் ரயில் புறப்படும் நேரமான காலை 5 மணிக்கு இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


பொம்மிடி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளான கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் பொதுமக்களை திரட்டி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் பயணிகள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், பயணிகள் நலச்சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எதிர்கால போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.


சங்கச் செயலாளர் ஜெபசிங், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ரயில் சேவை மேம்பாட்டின் அவசியம் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் முனிரத்தினம், துணைச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கௌரவ உறுப்பினர்களான நியூ டைம்ஸ் ரஃபீக், அருணாச்சலம், அய்யூப் கான், ரவிக்குமார் மற்றும் முருகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


மேலும் ரிடோ தொண்டு நிறுவனம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், ரயில் பயணிகள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies