தருமபுரி, ஜூன் 3:
தமிழ்நாடு அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் மாணவர்களுக்காக 28 பள்ளி விடுதிகள் மற்றும் 8 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 36 விடுதிகளும், மாணவியர்களுக்காக 23 பள்ளி விடுதிகள் மற்றும் 5 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 28 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் மொத்தம் 64 அரசு விடுதிகள் மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களும் சேர தகுதியுடையவர்கள்.
விடுதிகளில் வழங்கப்படும் சலுகைகள்
- அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் இலவச தங்குமிடம் மற்றும் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.
- 4-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.
- 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான வினாவங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.
சேர்க்கைக்கான தகுதிகள்
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க வேண்டும். இந்த விதிமுறை மாணவியர்களுக்கு பொருந்தாது.
விண்ணப்பம் பெறும் முறை
தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கான சேர்க்கைக்கு 18.06.2026-க்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கான சேர்க்கைக்கு 15.07.2026-க்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழ்களை இணைக்கத் தேவையில்லை. விடுதியில் சேர்க்கை பெறும் நேரத்தில் மட்டும் அவற்றை சமர்ப்பித்தால் போதுமானது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே, தகுதியுடைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அரசின் இந்த சிறப்பு நலத்திட்டத்தை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)