பாலக்கோடு, மே.28:
தருமபுரி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஐயப்பன் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் வேதபாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூர்ணாஹுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித கலச தீர்த்தங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்களது தலை மீது சுமந்து சென்று கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும், கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)

.jpg)