பென்னாகரம், மே.25:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர பகுதியில் உள்ள முள்ளுவாடி ஏரியின் கால்வாய் உடைந்ததால், ஏரி நீர் வீடுகள், தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். பென்னாகரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள முள்ளுவாடி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற போதுமான கால்வாய் வசதிகள் இல்லாததாக கூறப்படுகிறது. மேலும், உபரி நீர் வெளியேறும் வழித்தடங்கள் தொடர்பான பதிவேடுகள் கூட இல்லாததால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
முன்னதாக சிறிய ஏரியாக இருந்த இந்த ஏரியில் தற்போது பென்னாகரம் நகரப்பகுதி முழுவதும் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் உபரி நீர் வெளியேற வழியின்றி, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுவது வழக்கமாக இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பென்னாகரம் பகுதியில் கனமழை பெய்ததையடுத்து ஏரி நிரம்பியது. தொடர்ந்து, உபரி நீர் வெளியேற வழியில்லாத காரணத்தால் கால்வாய் உடைந்து, மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், தெருக்கள், வீடுகள் மற்றும் தருமபுரி – ஒகேனக்கல் பிரதான சாலையில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)