பென்னாகரம், மே.22:
தருமபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் உத்தரவின் பேரிலும், உணவு பாதுகாப்புத்துறை மாநில ஆணையரின் அறிவுறுத்தலின்படியும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் கூடும் இடங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், காலாவதி தேதி, லேபிள் விவரங்கள் மற்றும் சுகாதார நிலைமைகள் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்கு கேன்டீன்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், பென்னாகரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உரிய லேபிள் விவரங்கள் இல்லாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், அந்த கேன்டீன் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்து எச்சரிக்கை வழங்கப்பட்டது. அதேபோல், ஏரியூர் மற்றும் பி.அக்ரஹாரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் மூன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது குடிநீர் கேன்கள் மற்றும் பாட்டில்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி விவரங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என்றும், சேதமடைந்த மற்றும் விரிசல் உள்ள கேன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களிலிருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன.
மேலும், ஆதனூர், ஏரியூர் மற்றும் தின்னபெல்லூர் பகுதிகளில் உள்ள பேக்கரி மற்றும் தேநீர் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, இரண்டு கடைகளில் கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆதனூரில் பறிமுதல் செய்யப்பட்ட தேயிலை பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையிலிருந்து வாங்கப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையிலும் சோதனை நடத்தி ஒன்றரை கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், தேயிலை சப்ளை செய்த வியாபாரி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)