Type Here to Get Search Results !

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் ஊழல்? உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்: மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.


தருமபுரி, மே.22:


தருமபுரி புதிய பேருந்து நிலையம் அமைப்பில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி நகர மையத்தில் 1978 முதல் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


புதிய பேருந்து நிலையம் தருமபுரி நகரத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தினசரி சென்று வர பொதுமக்கள் கூடுதல் செலவு மற்றும் நேர விரயத்தை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் நகர மையப்பகுதியில் உள்ள நிலையில், அனைத்து பேருந்துகளையும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றியிருப்பது மக்களின் வசதியை புறக்கணித்த செயல் என குற்றம்சாட்டியுள்ளார்.


அதேபோல், பழைய பேருந்து நிலையத்தை நம்பி செயல்பட்டு வந்த சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும், புதிய பேருந்து நிலையத்தில் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்தும் நோக்கில் திட்டமிட்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதனால்,

  • தருமபுரி புதிய பேருந்து நிலையம் அமைப்பில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குறித்து
  • முந்தைய ஆட்சியினரின் பங்கு குறித்து
  • அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தொடர்பு குறித்து

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், தருமபுரி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் உள்மாவட்ட பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies