மாரண்டஹள்ளி, மே 18:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் மற்றும் தனியார் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை எண் 2835 காரணமாக பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்டோர் அச்சத்துடன் சென்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். குடிபோதையில் சாலையோரத்தில் தகராறு, பெண்களிடம் ஆபாச பேச்சு, போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்சினைகள் தினசரி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த மதுக்கடையை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போது பள்ளி மற்றும் கோயில் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற அரசின் அறிவிப்பிற்குப் பிறகும் இந்த கடை தொடர்வதாகவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், டி.எஸ்.பி. ராஜசுந்தர், இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 வாரங்களுக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)