பாலக்கோடு, மே.20:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மண்டு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. மண்டு மாரியம்மன், கற்பக விநாயகர், சித்தி விநாயகர், சேலத்து மாரியம்மன், கரகசெல்லியம்மன், கரகசாக்கப்பன், ஓம் சக்தி அம்மன் மற்றும் நவக்கிரக ஆலயங்களுக்கான கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகாசாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றன.
இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித கலச தீர்த்தக் குடங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தலைமேல் சுமந்து வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)


