Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே வாலிபர் தற்கொலை; தற்கொலைக்கு தூண்டியதாக பெண் மற்றும் கணவர் கைது.

 

பாலக்கோடு, மே. 23:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக கூறி பெண் ஒருவரையும் அவரது கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


பாலக்கோடு அடுத்த கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமியின் மகன் நவீன்குமார் (25). திருமணம் ஆகாத இவர், பாலக்கோடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்த நவீன்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


நவீன்குமாரின் கழுத்தில் கயிறு நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறி, அவரது பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த கோமதி மீது சந்தேகம் தெரிவித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கோமதி (32) மற்றும் அவரது கணவர் குருநாதன் (36) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோமதி அளித்த வாக்குமூலத்தில், “எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நான் கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். நவீன்குமாருடன் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. இந்த உறவு குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என நினைத்து, கடந்த ஓராண்டாக அவரை தவிர்த்து வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.


மேலும், சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த நவீன்குமார் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் வீட்டிற்குள் சென்று மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். கயிறு அறுந்து கீழே விழுந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும், பயந்துபோனதால் தனது கணவரை அழைத்ததாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.


பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரும் சேர்ந்து நவீன்குமாரின் உடலை அவரது வீட்டருகே கொண்டு சென்று போட்டுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாலக்கோடு போலீசார் கோமதி மற்றும் குருநாதன் மீது தற்கொலைக்கு தூண்டியது மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்புறப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த சம்பவம் கவுண்டனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல. மனஅழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல ஆலோசகர்களின் உதவியை நாடுங்கள்.


📞 Sneha Suicide Prevention Helpline – 044-24640050
📞 State Mental Health Helpline – 104
📞 Emergency Help – 112


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies