Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே வாலிபர் மர்ம சாவு: கொலையா? போலீசார் தீவிர விசாரணை.


பாலக்கோடு, மே.22:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அடுத்த கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமியின் மகன் நவீன்குமார் (25), திருமணம் ஆகாதவர். இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.


நேற்று மதியம், தனது வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்த நவீன்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இந்நிலையில், நவீன்குமாரின் கழுத்தில் கயிறு நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு, “இது கொலை சம்பவம்” என குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி பாலக்கோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


இதையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். பின்னர், பிரேத பரிசோதனை முடிந்து நவீன்குமாரின் உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்ட போது, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு டி.எஸ்.பி. ராஜசுந்தர், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கவுண்டனூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies